சட்டசபை தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. பிரமுகர் திராவிட மணி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த திருமணம் ஒரு மகிழ்ச்சியான தினத்தில் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் கழக தலைவராக நம் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று கழக தலைவராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அப்படிப்பட்ட சிறப்பான நாளில் இந்த திருமணம் நடைபெறுகிறது.
இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நம்முடைய தேர்தல் பிரசாரத்தை நாம் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நம்முடைய முதலமைச்சர் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைத்திட, இந்த திருமண நிகழ்ச்சி மூலம் நம்முடைய உறுதியை ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.