தமிழ்நாடு செய்திகள்
மலர்களை பாலித்தீன் கவர்கள் மூலம் ஊழியர்கள் மூடியதை காணலாம்

தொடர் மழை- மலர் கண்காட்சிக்கு தயாரான மலர்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள்

Published On 2022-05-18 09:34 IST   |   Update On 2022-05-18 09:34:00 IST
ஊட்டியில் மழை பெய்து வருவதால் மலர் கண்காட்சிக்கு தயாரான மலர்களை பாலித்தீன் கவர்களை கொண்டு மூடி ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழையும் பெய்தது. இந்த கனமழை காரணமாக கடும் மேகமூட்டமும் காணப்படுகிறது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மழையால் பல இடங்களில் காய்கறி பயிர்கள் அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மலர் கண்காட்சிக்காக கடந்த ஒரு மாத காலமாகவே பல வண்ண மலர்களை தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பல வண்ண மலர்களும் மழையில் நனைகின்றன. மலர்கள் மழையில் நனையாமல் இருக்க தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பூங்காவில் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களையும் பாலித்தீன் கவர்களை கொண்டு போர்த்தி பாதுகாத்து வருகிறார்கள். இந்த பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக பல்வேறு வண்ண மலர்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

தற்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால் மலர் கண்காட்சிக்கு தயாரான மலர்களை பாலித்தீன் கவர்களை கொண்டு மூடி பாதுகாத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News