செய்திகள்
பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ள காட்சி.

பழனியில் கனமழையால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

Published On 2021-11-27 07:12 GMT   |   Update On 2021-11-27 07:12 GMT
பழனியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பழனி:

பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. உபரிநீர் வெளியேற்றப்பட்டு குளங்கள், கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இதன்படி முழுக்கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் குதிரையாறு அணைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக இந்த தரைப்பாலம் சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தை தற்காலிமாக சீரமைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரால் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் பாலத்திற்கு மறுபுறம் உள்ள பூஞ்சோலை கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மீண்டும் கன மழை பெய்யும் பட்சத்தில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News