செய்திகள்
போலீசார் பாதுகாப்புக்காக நிற்பதை படத்தில் காணலாம்.

உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது

Published On 2021-11-24 08:02 GMT   |   Update On 2021-11-24 08:02 GMT
கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த சாலைபுதூர் பகுதியில் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த லாரி, வேன், கார்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் அனுமதி கட்டணம் இல்லாமல் செல்வதற்கு டிரைவர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இன்று (24-ந்தேதி) கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று டிரைவர்கள் அனைத்து வாகனங்களையும் கயத்தாறு பஜாரில் நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த டிரைவர்கள், பொதுமக்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களிடம் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையொட்டி அவர்கள் கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, டி.எஸ்.பி.க்கள் உதயசூரியன், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

சுங்கச்சாவடியில் உள்ள ஒவ்வொரு கவுண்டர்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Tags:    

Similar News