செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க திரண்ட பொதுமக்களை காணலாம்

கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்- கொரோனா தொற்று பரவும் அபாயம்

Published On 2021-10-03 12:08 IST   |   Update On 2021-10-03 12:08:00 IST
பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:

தமிழகத்தில் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கடலூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளில் திரள்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறை முகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர். மேலும் பைபர் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காணமுடிந்தது.

புரட்டாசி மாதம் என்றாலும் நகர் முழுவதும் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கம் போல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காணமுடிந்தது. மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். இதனை தொடர்ந்து இறைச்சிக்கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இறைச்சி வாங்கி சென்றனர்.

ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் முககவசம் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று மீன்களை வாங்கி சென்றனர்.

இதனை பார்க்கும்போது திருவிழா காலத்தில் கூட்டம் கூட்டமாக திரண்டிருப்பது போல் எந்தவித அச்சமும் இன்றி நோய் பரவல் எளிமையாக பரவக்கூடிய அளவில் பொதுமக்களின் அலட்சியமாக இருப்பது தெரிய வருகிறது.

ஆகையால் பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Similar News