செய்திகள்
கொலை

திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் அடித்துக்கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2020-09-13 12:30 IST   |   Update On 2020-09-13 12:30:00 IST
அரியலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23), பால் வியாபாரி. இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியா (18) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்றும் அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டுக்கு வந்த தமிழரசன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த தமிழரசன் பிரியாவை தாக்கியதில் தலையில் அடிபட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தமிழரசன் அங்கிருந்து சென்று விட்டார்.

அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது பிரியா தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தமிழரசனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஆர்.எஸ்.பதி தோப்பில் போதை மயக்கத்தில் தமிழரசன் மயங்கி கிடந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தமிழரசன் மனைவியின் கழுத்தை நெரித்து தாக்கியதோடு சுவற்றில் வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிரியா இறந்துள்ளது தெரியவந்தது. திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய்த்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News