செய்திகள்
மரணம்

விக்கிரமங்கலம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்

Published On 2020-09-12 11:10 IST   |   Update On 2020-09-12 11:10:00 IST
விக்கிரமங்கலம் அருகே திருமணமாகி சுமார் 70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள காசான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேதுமணியன் (வயது 94). விவசாயி. இவரது மனைவி கமலம் (88). இந்த தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர். சேதுமணியன், கமலம் ஆகியோர் மகன்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக சேதுமணியன் கடந்த 9-ந்தேதி இறந்துவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேது மணியனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள், கமலத்தை அழைத்து வந்து சேதுமணியனின் உடல் அருகே அமர வைத்தனர். அப்போது தனது கணவரின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த கமலம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி, பெஞ்சில் படுக்க வைத்தனர். பின்னர் சேதுமணியனின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கமலத்தை, உறவினர்கள் எழுப்ப முயன்றபோது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். இதையடுத்து கணவர் இறந்த துக்கத்தில் அவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடலுக்கு நேற்று காலை இறுதிச்சடங்குகள் செய்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திருமணமாகி சுமார் 70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News