70 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு- சென்னை வாலிபர் கைது
நாட்டறம்பள்ளி:
தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 24). டிப்ளமோ படித்த இவர் சென்னை குரோம்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் கல்லூரி மாணவி ஒருவர் தவறவிட்ட செல்போனை வைத்துக் கொண்டு அந்த செல்போனில் ட்ரூகாலரில் பெண்கள் பெயர் வந்தால் அந்த பெண்களின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி ஆசைவார்த்தை கூறி பல்வேறு ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார்.
மேலும் வினோத் மற்றொரு செல்போன் எண்ணிலிருந்து தான் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் அடிக்கடி செக்ஸ் தொல்லை செய்து மிரட்டி வந்துள்ளார்.
இதேபோன்று நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் வினோத் ஆபாச வார்த்தைகள் பேசி, ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்னை குரோம்பேட்டை பகுதியில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செல்போன் கடை எதிரே நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த வினோத்தை போலீசார் கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
அவரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 70-க்கும் அதிகமான பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியதும் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி அவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.