செய்திகள்
கொள்ளையன்

கோவில் உண்டியலில் தவறவிட்ட செல்போனால் போலீசில் சிக்கிய கொள்ளையன்

Published On 2019-11-02 09:21 IST   |   Update On 2019-11-02 09:21:00 IST
புதுக்கோட்டை அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் செல்போன் மூலம் போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கீழாநிலைகோட்டையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இக்கோவில் உண்டியல் சாய்ந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் துப்புரவு பணியாளர் உண்டியல் அருகே சென்று பார்த்தபோது உண்டியல் உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலுக்கு வந்து உண்டியலை திறந்து பார்த்தனர். அப்போது உண்டியலுக்குள் செல்போன் ஒன்று கிடந்தது. இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு சென்று அந்த செல்போனை கைப்பற்றி, அது யாருடையது என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த செல்போன் கீழாநிலைகோட்டையை சேர்ந்த பூக்கடை தொழிலாளி அரசப்பன் (வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அரசப்பன் செல்போன் டார்ச் லைட்டை பயன்படுத்தி உண்டியலில் இருந்த பணத்தை திருடியபோது செல்போன் தவறி உண்டியல் உள்ளே விழுந்ததும், செல்போனை எடுக்க முயற்சி செய்தும் எடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அரசப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் செல்போன் மூலம் போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News