செய்திகள்

அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் - தங்க தமிழ்செல்வன்

Published On 2019-05-11 05:35 GMT   |   Update On 2019-05-11 05:35 GMT
அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

மதுரை:

மதுரையில் இன்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றிபெறும். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம். அதற்காக வாக்களிப்போம்.

இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாக கொண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

தி.மு.க.வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியை கலைக்க தி.மு.க. வோடு கூட்டணி வைத்தவர் தான் ஓ.பி.எஸ். பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வருகிற 23-ந் தேதி தெரியவரும்.

அன்றைய நாளில் தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.

தேனி தொகுதியில் மறுவாக்குபதிவு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும் போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News