செய்திகள்

மோடியின் டாடி வந்தாலும் அதிமுக அரசை காப்பாற்ற முடியாது- தினகரன் பேச்சு

Published On 2019-05-10 12:22 GMT   |   Update On 2019-05-10 12:22 GMT
மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது என்று தினகரன் பேசியுள்ளார். #dinakaran #modi #tamilisai

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, மூலக்கரை பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. அதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் மக்கள் அ.ம.மு.க.வின் சின்னமான பரிசு பெட்டகத்துக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல திருப்பரங் குன்றம் தொகுதி இடைத் தேர்தலிலும் வாக்காளர்களாகிய நீங்கள் அ.ம.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் மே 1-ந்தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல மே 23-ந்தேதியை துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக கொண்டாட வேண்டும். தோல்வி பயம் காரணமாகவே 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப்பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே இந்த அவல ஆட்சிக்கு சாட்சி. மக்களின் விரோதியான சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அதேபோல பொது மக்களாகிய நீங்கள் வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.

எனக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த துரோக ஆட்சியை வீடுக்கு அனுப்ப வேண்டும். அதுவே எனது கொள்கையும் கோட்பாடும் ஆகும்.

எங்களுக்கு சிறை கம்பி சின்னத்தை வழங்க வேண்டும் என்று கூறிய தமிழிசைக்கு கிருஷ்ணர் எங்கு பிறந்தார்? எனத் தெரியுமா? எங்களுக்கு சிறை கம்பியை சின்னமாக கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அ.ம.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

மேற்கண்டவாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #modi #tamilisai

Tags:    

Similar News