செய்திகள்

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி - 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி

Published On 2019-04-29 09:43 GMT   |   Update On 2019-04-29 09:43 GMT
மதுராந்தகம் அருகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SSLC #SSLCResult
மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (15). இவர் மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார்.

தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவி சந்தியா தேர்வில் தேர்ச்சி பெற்றாரா? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர்.

இதில் அவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிந்தது. தமிழ் -39, ஆங்கிலம்-35, கணிதம்-37, அறிவியல் -45, சமூக அறிவியல் -35 என மொத்தம் 191 மதிப்பெண் பெற்று இருந்தார்.

தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்த சம்பவம் அவரது தோழிகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SSLC #SSLCResult
Tags:    

Similar News