செய்திகள்

போலி கருத்து கணிப்பு நடத்தி மக்களை ஏமாற்ற முடியாது- அமைச்சர் மணிகண்டன் பேட்டி

Published On 2019-04-21 16:05 IST   |   Update On 2019-04-21 16:05:00 IST
தினகரனும், ஸ்டாலினும் கூட்டு சேர்த்துக் கொண்டு போலி கருத்து கணிப்பு நடத்தி மக்களை ஏமாற்ற முடியாது என்று அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். #ministermanikandan #mkstalin #dinakaran

ராமநாதபுரம்:

அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் ஊடகங்கள் தி.மு.க. கூட்டணி தான் அதிக இடத்தை கைப்பற்றும் என போலி கருத்து கணிப்புகள் நடத்தி அந்த கணிப்புகளை திணித்து மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என ஸ்டாலின் எண்ணினார்.

மக்களின் இதயங்களில் யாருக்கு இடமுண்டு என்பதை கருத்து கணிப்புகளால் கணித்துவிட முடியாது.

மக்களின் இதயங்களில் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போலி கருத்து கணிப்புகள் நடத்தினாலும் அம்மாவின் அன்பு பிள்ளைகளாக திகழும் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கணிப்புக்கும், திணிப்புக்கும் இங்கு வேலையில்லை.

முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து களப்பணி ஆற்றி அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனர்.


டி.டி.வி.தினகரனும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கூட்டு சேர்த்துக் கொண்டு போலி கருத்து கணிப்புகளை நடத்த சில ஊடகங்களை விலை பேசியுள்ளனர். இவர்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப தயாராகவில்லை. மே 23-ந்தேதி கருத்து திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ராமநாதபுரம் பாராளுமன்ற கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கும் வாக்களித்த மக்களுக்கும், என்னுடன் இரவு பகல் பாராமல் கண்விழித்து களப்பணியாற்றிய அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #ministermanikandan #mkstalin #dinakaran

Tags:    

Similar News