செய்திகள்

செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு சர்க்குலர் புறநகர் ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது

Published On 2019-04-17 05:31 GMT   |   Update On 2019-04-17 05:31 GMT
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சுற்றுவட்ட ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது.
சென்னை:

சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-அரக்கோணம், கடற்கரை- அரக்கோணம் மார்க்கங்களில் தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்று வட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதன் பேரில் ரெயில்வே வாரியம் சுற்று வட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தது.

இதைதொடர்ந்து சென்னை கடற்கரை- திருமால்பூர், திருமால்பூர்- கடற்கரை மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்- கடற்கரை மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

தற்போது தக்கோலம்- அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் சுற்றுவட்ட ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரடியாக செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் புறநகர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News