செய்திகள்

கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்து விட்டது - டிடிவி தினகரன்

Published On 2019-04-13 10:11 GMT   |   Update On 2019-04-13 10:11 GMT
கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கடலூரில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
கடலூர்:

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அம்மா மக்கள் முன்னேற்றகழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.

பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றதோடு ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். என்று கூறியவர்கள் பா.ம.க. வினர். அவர்களுடன் தமிழகத்தை ஆளுவோர் கூட்டணி வைத்துள்ளனர்.

ஜெயலலிதா இருக்கும் வரை ஜி.எஸ்.டி. வரியை தடுத்து வந்தார்.

மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாரதிய ஜனதா கட்சியினர் கூறிக்கொள்கின்றனர். இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகின்றனர்.

தி.மு.க. இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

நீட் தேர்வு, குடிநீர், மீனவர் பிரச்சினை, என்.எல்சி. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை, விவசாயவிளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இதுகுறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும். தற்போது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் மீட்க வேண்டிய நிலைஉள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடிபேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வைப்பு தொகையை தி.மு.க. இழந்தது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.

எனவே பொதுமக்கள் ஜாதி, மதம், குறித்துப் பேசு வோரைப் புறக்கணித்து அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். மாநில கட்சிகளால் மட்டுமே மாநில பிரச்சினைகளை தீர்க்க முடியும். தேசியக் கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
Tags:    

Similar News