செய்திகள்

ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2019-03-29 16:28 IST   |   Update On 2019-03-29 16:28:00 IST
ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் உறுதியளிக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #rahulgandhi #parliamentelection

பேரையூர்:

விருதுநகர் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கோசு குண்டு சீனிவாசனை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மத்தியில் நடக்கும் மோடியின் பாசிச ஆட்சியை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களோடு, மக்களாக நானும், தி.மு.க.வும் இருக்கிறோம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? அவர்மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

பிரதமராக இருப்பதால் தான் அவரிடம் கேள்வி கேட்கிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சி கேவலமானது. 2 ஆட்சியையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். விவசாய, கல்விக்கடன் தள்ளுபடி, ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி, இலவச ரெயில் பாஸ், நீட் தேர்வு ரத்து, கியாஸ், கேபிள் கட்டணம் குறைப்பு போன்ற ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம்.

மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தவுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்களுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என கூறியிருக்கிறார். அது பற்றி கவலைப்பட தேவையில்லை. அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் உறுதியளிக்கிறேன். ஏனென்றால் வாக்குறுதி அளித்தது மோடி அல்ல, ராகுல் காந்தி. அவர் நிச்சயம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருக்கின்றன. கொள்கை ரீதியாக அவர் எதிரியாக இருந்தாலும் முதல்- அமைச்சர் என்ற முறையில் மரியாதை இருக்கிறது. எனவே அவரது மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.  #mkstalin #rahulgandhi #parliamentelection

Tags:    

Similar News