செய்திகள்
பார் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை- பார் நாகராஜ், திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

Published On 2019-03-26 04:13 GMT   |   Update On 2019-03-26 06:30 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜன் மற்றும் திமுக பிரமுகர் மகன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. #PollachiAbuseCase #BarNagaraj
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதுகுறித்து திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மணிவண்ணன்

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட  செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #BarNagaraj

Tags:    

Similar News