செய்திகள்

கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை

Published On 2019-03-11 09:14 GMT   |   Update On 2019-03-11 09:14 GMT
கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் போல நடித்து ரூ.97 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.

இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று பஸ்சை வழி மறித்தது. பின்னர், பஸ்சில் ஏறிய வாலிபர்கள் சிலர், கோபிநாத்திடம் சென்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பின்னர் விசாரணைக்கு வருமாறு அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி காரில் கடத்தினர்.

பின்னர் கீழ்ப்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி கார் சீறிப்பாய்ந்தது. வண்டலூர் அருகில் வைத்து கோபிநாத்திடம் இருந்த ரூ.97 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.

இதுபற்றி கோபிநாத் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபிநாத்தை காரில் கடத்திச் சென்ற கும்பல் அடையாளம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News