செய்திகள்

தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது- தமிழிசை பேச்சு

Published On 2019-03-10 10:14 GMT   |   Update On 2019-03-10 10:14 GMT
தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் பேசியுள்ளார். #admk #bjp #tamilisai #parliamentelection

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கொடியேற்றி பேசியதாவது:-

தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. நிச்சயமாக இந்தக் கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், தோல்வியடைந்த அனைவரும் அவர்களிடம் உள்ளனர். வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. பலம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #admk #bjp #tamilisai #parliamentelection

Tags:    

Similar News