செய்திகள்

அரசு அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு ஆளுங்கட்சி துணிந்துவிட்டது- திருநாவுக்கரசர்

Published On 2019-03-08 16:34 IST   |   Update On 2019-03-08 16:34:00 IST
தபால் வாக்குப் போடும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு ஆளுங்கட்சி துணிந்து விட்டது என்று திருநாவுக்கரசர் கூறினார் #Congress #Thirunavukkarasar
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 13-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக கன்னியாகுமரிக்கு வருகிறார். அந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வரும் 15-ந்தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் பேச்சாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த எந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு தி.மு.க.வில் பேசி முடிவு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து ஆணையம் நடத்த வேண்டும். இதனால் தேர்தல் ஆணையத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் செலவு மிச்சப்படும்.

அ.தி.மு.க. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கு அச்சப்படுகிறது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டப்படி 21 சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் எடுக்கும் விதிமுறைகள் குறித்த நடவடிக்கையால் தேர்தல் முறையாக நடக்கும் என்ற வரவேற்பு இருந்தாலும் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உடனுக்குடன் அறிவிக்கக் கூடாது.

தற்போது தேர்தல் ஆணையம் போட்டியிடும் வேட்பாளர்கள் ஐந்து வருடம் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தடையாக இருக்கக்கூடும். எனவே முன்கூட்டியே விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

தே.மு.தி.க. கூட்டணி விவகாரத்தில் துரைமுருகன் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. அவர் நடந்தவற்றை தான் கூறியுள்ளார்.

தினகரன் அணியுடன் யாரும் கூட்டு சேரவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், நான் தினகரன் ஆதரவாளர் இல்லை என்றும், ஏற்கனவே நான் தினகரன் ஆதரவாளர் என்ற தோற்றம் உள்ளது என்றார்.

ரபேல் போர் விமான கோப்புகள் கூட பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத மத்திய அரசு இந்திய நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். இதிலிருந்து ஊழல் நடந்துள்ளது என்று உறுதி ஆகிறது.

தேர்தல் ஆணையம் கெடுபிடியால் தேர்தல் முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் துணை முதல்வர் தபால் வாக்குகளுக்கு எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுடன் பேசும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது மோசமான முன்னுதாரணம். தபால் வாக்குப் போடும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு ஆளுங்கட்சி துணிந்து விட்டது. மக்களுக்கு இதை விட அதிக அளவு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சூழ்நிலையில் தான் அ.தி.மு.க. இருக்கும். எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா. வந்தால் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், முதலில் அவர் வரட்டும், அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றார். #Congress #Thirunavukkarasar

Similar News