செய்திகள்

நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்- அபினந்தன் குடும்பத்துக்கு கமல்ஹாசன் ஆறுதல்

Published On 2019-02-28 06:32 GMT   |   Update On 2019-02-28 06:32 GMT
பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் குடும்பத்துக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #Abhinandan #KamalHaasan
சென்னை:

பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அபினந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொது மக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அபினந்தனின் தந்தை வர்த்தமானை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். வர்த்தமானும் முன்னாள் ராணுவ வீரர் தான். அவரிடம் கமல் கூறியதாவது:-

‘ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களை போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது. உங்களைப்போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அபினந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.

இது குறித்து நான் டுவிட்டரில் எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம். எனவே தான் நான் உங்களிடம் நேரடியாக பேசுவது முக்கியம் என்று நினைத்து உங்களை அழைத்தேன். எனது அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.

ஆனால் இன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத்தக்க செய்தி. அபினந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும் நலமுடனும் நாடு திரும்பி வருவார் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.’

இவ்வாறு கமல் ஆறுதல் கூறினார்.

தனக்கு ஆறுதல் கூறியதற்காக கமல்ஹாசனுக்கு வர்த்தமான் நன்றி தெரிவித்துள்ளார்.  #Abhinandan #KamalHaasan
Tags:    

Similar News