செய்திகள்

எங்களோடு இருந்தவரை அழைத்து கட்சி நடத்துவது தி.மு.க. பலவீனத்தை காட்டுகிறது- புகழேந்தி பேச்சு

Published On 2019-01-26 12:24 GMT   |   Update On 2019-01-26 12:24 GMT
நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து கட்சி நடத்துவது பலவீனத்தை காட்டுகிறது என்று வேலூரில் புகழேந்தி பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

வேலூர்:

வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

‘‘டி.டி.வி. தினகரன் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் ஆதரவோடு அவர் அரியணை ஏறப்போகிறார்’’.

எம்.ஜி.ஆர். ஆட்சியை கட்டிக்காத்து மக்களுக்காக ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்தார். அவருக்கு உதவியாக இருந்து பல தியாகங்களை செய்தவர் சசிகலா.

ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றி பெற செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நீங்கள்தான் பொதுச்செயலாளராக, முதல்வராக வரவேண்டும் என்று அழைத்தனர்.

சசிகலா என்ன தவறு செய்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அழைத்துவிட்டு தற்போது தரம் தாழ்த்தி பேசுகின்றார்கள்.

துரோக ஆட்சி நடத்தியவர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்க வேண்டும். மக்கள் ஆதரவோடு டி.டி.வி. தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். இப்போது தரம் தாழ்ந்து பேசுபவர்களை காலம் மறந்து விடாது.

அரசியலில் நாங்கள் தவழ்ந்து வரும் குழந்தையாக இருந்துவிட்டு போகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து சென்று கரூர் மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது.

எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

பா.ஜ.க. வட மாநிலங்களில் தோல்வியடைந்து விட்டது. அதுமுடிந்து போன கட்சி. வரும் தேர்தலில் 60 அல்லது 70 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

Tags:    

Similar News