செய்திகள்
விபத்தில் கவிழ்ந்த அரசு பஸ்சையும், சேதமடைந்த சுற்றுலா வேனையும் படத்தில் காணலாம்.

திண்டிவனம் அருகே விபத்து- வாலிபர் பலி

Published On 2019-01-17 04:45 GMT   |   Update On 2019-01-17 04:45 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:

சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் அய்யப்பன் (வயது 36) ஓட்டி சென்றார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறவழி சாலைக்கு திரும்பியபோது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்த வேன் மீது திடீரென்று மோதியது.

இந்த விபத்தில் பஸ் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். அதேபோல் விபத்தில் சுற்றுலா வேனும் பலத்த சேதம் அடைந்தது. இதில் சுற்றுலாவேனில் பயணம் செய்த சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரகுமார் (39) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதுபோல் சுற்றுலா வேனில் பயணம் செய்த 13 பேரும், பஸ்சில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் ரோசனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காயம் அடைந்த 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிலர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ்சும், சுற்றுலா வேனும் மோதியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சையும், வேனையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

Tags:    

Similar News