செய்திகள்
அலங்காநல்லூரில் காளைக்கு பயிற்சி அளிக்கும் உரிமையாளர்.

நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல்தகுதி சோதனை

Published On 2019-01-01 10:31 IST   |   Update On 2019-01-01 10:31:00 IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. #Jallikattu

அலங்காநல்லூர்:

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும்.

காளைகள் துன்புறுத்தப்படுவதை காரணம் காட்டி 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன.

இருப்பினும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி அரசின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளை பங்கேற்க செய்வோர் அதற்கான உரிய சான்றிதழை கால்நடைத்துறையிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் நாளை (2-ந் தேதி) முதல் வருகிற 12-ந்தேதி வரை காளைகளுக்கு உடல் தகுதி சோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

காளைகளின் உயரம் 120 செ.மீட்டராக இருக்க வேண்டும். காளையின் வயது குறைந்தபட்சம் 8 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

கொம்பின் கூர்மைத் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உள்ளதா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள்.

பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். பதிவின் போது காளையின் உரிமையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ்போட்டே, ஆதார், ரேசன் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. கேலரிகளும், தடுப்பு வேலிகளும் அமைக்க சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம், நீச்சல் பழகுதல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #Jallikattu

Tags:    

Similar News