செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - ஜி.ராமகிருஷ்ணன்

Published On 2018-12-25 06:57 GMT   |   Update On 2018-12-25 06:57 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். #Sterlite #SC
திரூவாரூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியுள்ளார். அப்போது அவர் தமிழக மக்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் தமிழக அரசு, கஜா புயலுக்கு கேட்டுள்ள நிவாரண நிதி குறித்தும் எதுவும் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் நிலையை விமர்சித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதனை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரியும், உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரியும் வருகிற 2-ந் தேதி முதல் 4-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sterlite #SC

Tags:    

Similar News