2025 REWIND: இந்த ஆண்டு உலகின் வலிமையான பாஸ்போர்ட்கள் இவைதான் - இந்தியாவுக்கு எந்த இடம்? - பட்டியல் ரெடி
- 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
- ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை வலிமையை தீர்மானிக்கின்றன.
ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வலிமையை வைத்தே உலக நாடுகளில் அந்நாட்டின் முக்கியத்துவம் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமை ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index 2025) மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றவுடன் விசா பெற்று நுழைய முடியும் என்பதே இந்த தரவரிசையின் அடிப்படை.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
முதலிடத்தில் சிங்கப்பூர். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.
ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்களுக்கு 188 நாடுகளில் விசா இல்லாத அனுமதி கிடைக்கும்.
சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியோடு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளன.
இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது 'விசா ஆன் அரைவல்' முறையில் பயணம் செய்ய முடியும்.
சமீபகாலமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது இந்தியாவின் தரவரிசைக்கு வலு சேர்த்துள்ளது.
அதேநேரம் அண்டை நாடான பாகிஸ்தான் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மிகக் குறைவான நாடுகளுக்கே பாகிஸ்தான் குடிமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.
சுவாரஸ்யமாக சீனா 58-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகி இருந்தபோதிலும் சீனா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தனித்து உள்ளதால் அதன் தரவரிசை பிந்தங்கி உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா தனது தூதரக உறவுகள் மூலம் தனது தரவரிசையை வேகமாக உயர்த்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் கடைசியாக உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பிற நாடுகளுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படுகிறது.
இந்தியா பல நாடுகளுடன் விசா இல்லாத பயண ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.