செய்திகள்

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு பகல் வேடம்- மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பேட்டி

Published On 2018-12-24 10:18 GMT   |   Update On 2018-12-24 10:18 GMT
தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் பிரதமர் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். #mekedatuissue

புதுக்கோட்டை:

பெரியாரின் 45-வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் அனைவரும் செயல்படுத்த வேண்டும். அவரது கொள்கைக்கு ஏற்ப மதவாத சக்தியை இன்றைக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு பகல் வேடம் போடுகிறது. கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு அணை கட்ட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். பா.ஜ.க.விற்கு கர்நாடகாவிலும் வாக்கு வங்கி போகக்கூடாது. தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் தான் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற தி.மு.க. வின் நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை அனைத்து கட்சிகளும் மறுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து தான் வேறு கட்சிகள் பிரதமர் வேட்பாளரை யாரும் முன்மொழியவில்லை.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறந்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தான் தெரிய வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது அணை பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய பிறகு வேண்டு மென்றே மோடியின் அனும திக்காக ஆளுநர் காத்திருக்கி றார். உடனடியாக இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். எவ்வளவுதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரம் செய்தாலும் மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தவில்லை. அரசு என்று ஒன்று இருப்பதாகவே இன்றைக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று வழங்கக் கூடாது, நஷ்டஈடு என்று கூறி அதிக தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #mekedatuissue

Tags:    

Similar News