செய்திகள்

புதுக்கோட்டை-கரூரில் விவசாயி உள்பட 3 பேர் கொலை

Published On 2018-12-24 05:09 GMT   |   Update On 2018-12-24 05:09 GMT
புதுக்கோட்டை-கரூரில் விவசாயி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (22). ஆலங்குடி அற்புத மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (25).

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்றிரவு ஆலங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் திருமண மண்டபத்தின் மாடியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதையில் இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சிவசுப்பிரமணியனை சரமாரி தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

ரத்தக்கறை படித்த சட்டையுடன் அப்துல்ரகுமான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கேட்டபோது, கீழே விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறி விட்டு திடீரென்று அங்கிருந்து தப்பியோடினார்.

சந்தேகமடைந்த பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி தப்பியோடிய அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

கைதான அப்துல்ரகுமான் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி குடிபோதையில் பலரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் போதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ராக்கத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் போசங்கு, ரவி (வயது 49). அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு ரவி வீட்டிற்கு, அவரது மருமகன் மனோகரன் மற்றும் உறவினர்கள் கமல், தேவராஜ், ராஜேஷ், போதும் பொண்ணு, குரோசி ஆகியோர் அரிவாள், கம்பி மற்றும் ஆயுதங்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகராறு முற்றியதில் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் ரவி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, அவர்களது மகன் அஜித் (19) ஆகியோரை தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது ரவியை விரட்டி விரட்டி சென்று தாக்கியதில் அவருக்கு நெற்றியில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரி, அஜித் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்ததும் உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அஜித், மகேஸ்வரியையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கரூர்- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது மணல் மேடு கிராமம். இதனையொட்டிய தனியார் பேக்கரிக்கு பின்புறம் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலை மற்றும் முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் இருந்தது. அருகிலேயே மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. கொலையுண்டு கிடந்தவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரிய வில்லை.

அந்த வழியாக வந்த வாலிபரை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பெண் பிரச்சினையில் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும், அதனால் ஆத்திரத்தில் முகத்தை சிதைத்து கொடூரமாக மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேதிக்கிறார்கள்.

தொடர்ந்து அந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News