செய்திகள்

குமரி மாவட்ட கலெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: 20-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2018-12-18 11:47 GMT   |   Update On 2018-12-18 11:47 GMT
குமரி மாவட்ட கலெக்டர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலர், கூட்டுறவுத்துறை செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench
மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

"எனக்கு வயது 18. 18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் ஷோபாவுக்கு மகப்பேறு நேரத்தில் அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

18 ஆண்டுகளாகியும் எனது தாயாரை கோமா நிலையில் இருந்து மீட்க முடியவில்லை. நானும் உடல் நலகுறைவாக உள்ள தாயாரும் வாழவழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம்.

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், தவறான சிகிச்சை அளித்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

அதைத்தொடர்ந்து ஷோபா குடும்பத்திற்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை குமரி மாவட்ட கலெக்டர் வழங்க கடந்த அக்டோபர் 10-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால், நீதிமன்றம் தானாக முன்வந்து குமரி மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆதர்ஷாவின் தாயார், ஷோபாவிற்கு பிரசவம் நடைபெற்ற குலசேகரம் கூட்டுறவு மருத்துவமனை தற்போது மூடப்பட்டுவிட்ட நிலையில், அவர்களிடம் இது தொடர்பாக இழப்பீடு கோர இயலுமா? என்பது குறித்து அறிய வக்கீல் ஆணையராக லஜபதி ராயை நியமித்தும், தமிழக சுகாதாரத்துறை செயலர், கூட்டுறவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
Tags:    

Similar News