தமிழ்நாடு செய்திகள்

சபரிமலை கோவில் தங்க தகடு திருட்டு வழக்கு - சிறப்பு புலனாய்வு குழுவினர் ராஜபாளையத்தில் விசாரணை

Published On 2025-12-30 12:00 IST   |   Update On 2025-12-30 12:00:00 IST
  • கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
  • சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.

ராஜபாளையம்:

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.

அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார். 

Tags:    

Similar News