செய்திகள்

பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு

Published On 2018-12-13 14:00 GMT   |   Update On 2018-12-13 14:00 GMT
ஆரணி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி:

ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே இன்று அதிகாலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தேடிபார்த்தனர்.

அப்போது பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அறுபட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் குழந்தையை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டது.

குழந்தைக்கு எடை குறைபாடு இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு, 881 விகிதம் தான் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த மாதம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு அதிகம் நடப்பது கண்டுபிடிக்கபட்டு 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News