செய்திகள்

மத்திய அரசு மீதான அதிருப்தியே பா.ஜனதா தோல்விக்கு காரணம்- சரத்குமார்

Published On 2018-12-12 09:18 GMT   |   Update On 2018-12-12 09:18 GMT
மத்திய அரசு மீதான அதிருப்தியே பாரதிய ஜனதாவின் தோல்விக்கு காரணம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடந்து முடிந்த தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இன்னும் சில மாதங்களில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

2014-ம் ஆண்டு பா.ஜனதா மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு. அவசர கதியில் சரியான திட்டமிடல் இன்றி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்த அறிவிப்புகளின் தோல்வி, ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு, அனைத்திற்கும் மேலாக பாரம்பரியம் மிக்க நமது மதநல்லிணக்கத்திற்கு விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என்பன போன்றவை பா.ஜனதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே பெருமளவு உண்மை.

மத்திய அரசின் மீதான அதிருப்தியே இத்தேர்தலில் எதிரொலித்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜனதாவின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது என்றே கருதலாம். இதன் மூலம் பாஜக, பாடம் கற்கவேண்டிய தருணம் இது என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
Tags:    

Similar News