செய்திகள்

திண்டுக்கல் அருகே குறை கேட்க சென்ற தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2018-11-20 10:44 GMT   |   Update On 2018-11-20 10:44 GMT
திண்டுக்கல் அருகே குறை கேட்க சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். #ADMK #ThambiDurai #GajaCyclone
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி மேட்டுப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களிடம் குறை கேட்க சென்றார். அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி ஓடியது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது பெய்த மழையினால் தண்ணீர் தேங்கியதாக கூறினர். தம்பித்துரை வருகை குறித்து அறிந்ததும் சமத்துவபுரம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

தங்கள் பகுதியில் கடந்த 2 வருடமாக குடிநீர் வரவில்லை என்றும் சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் தம்பித்துரை அதிகாரிகளை அழைத்து இதுபோன்ற சிறு பணிகளைகூட செய்ய முடியவில்லையா? என ஆவேசமாக கண்டித்தார். அதன்பிறகு விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை மற்ற கட்சியினர் அரசியலாக்க பார்க்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்தனர்.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு கவர்னரிடம் பரிந்துரை செய்ததின்பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., ஒன்றி செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர்கள் மணி, பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #ThambiDurai #GajaCyclone
Tags:    

Similar News