null
2025 REWIND: அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு... ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - மகளிர் நீதிமன்றம் அதிரடி
- பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
- ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு கடந்த 2024-ம் ஆண்டு டிச. 23-ந்தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டார்.
ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.
பின், இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7-ந்தேதி மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28-ந்தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜூன் 2-ந்தேதி தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். விரைவான விசாரணைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின், ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்தே ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உள்ளிட்ட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு அளிக்க தாமதம் ஆனாலும் குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது அனைத்து தரப்பிலும் வரவேற்கப்பட்டது.