செய்திகள்
கோப்புப்படம்

நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம்- முக ஸ்டாலின் பயணத்தை ரத்து செய்து சென்னை புறப்பட்டார்

Published On 2018-11-18 08:07 GMT   |   Update On 2018-11-18 08:07 GMT
நிவாரம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் முக ஸ்டாலின் பயணத்தை ரத்து செய்து திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டார். #GajaCyclone #GajaStorm
தஞ்சாவூர்:

கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. கிராம மக்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளை இழந்ததும் தவித்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் படகுகளும் சேதமாகி உள்ளன.

பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள், வாழைகள், தென்னைகள் முறிந்து விழுந்ததில் டெல்டா விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தரங்கம்பாடி, நாகை அக்கரைபேட்டை, வேதாரண்யம், மற்றும் பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு தஞ்சை சங்கம் ஓட்டலில் முக ஸ்டாலின் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முக ஸ்டாலின், தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து அவர் பார்வையிட நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.

புதுக்கோட்டை செல்லும் வழியில் கந்தவர்வக்கோட்டை பகுதியில் சாலையில் பொது மக்கள், கஜா புயல் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் முக ஸ்டாலின் பயணத்தை கைவிட்டு திரும்பினார். பிறகு அங்கிருந்து திருச்சி வழியாக கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பொதுமக்கள் போராட்டம் காரணமாக முக ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News