செய்திகள்

கஜா புயலால் பாதிப்பு: நாகை மாவட்டத்தில் இரவு- பகலாக மீட்பு பணிகள்- அமைச்சர் உதயகுமார் பேட்டி

Published On 2018-11-18 04:48 GMT   |   Update On 2018-11-18 04:48 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இரவு - பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
நாகப்பட்டினம்:

கஜா புயலுக்கு நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடலோர கிராமங்களில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பிரதான சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக 151 நவீன மரம் அறுக்கும் எந்திரங்கள், 92 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 28 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்கு 2 ஆயிரம் பணியாளர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

புயலில் சிக்கி சாய்ந்துள்ள மரங்களை அகற்றவும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றிடவும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்களில் வீடுகள், மரங்கள், பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களின் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புயலால் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜெனரேட்டர்கள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மின் இணைப்பு வழங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினர்.
Tags:    

Similar News