செய்திகள்

விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்- ஜிகே வாசன் வலியுறுத்தல்

Published On 2018-11-03 07:07 GMT   |   Update On 2018-11-03 07:07 GMT
விவசாய தொழில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையிலும், புதிய கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் வாராக்கடன் ரூ.9.61 லட்சம் கோடி என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடன் இருப்பதாக அறிவிக்கும் அரசு, அந்த கடனை வசூல் செய்ய முறையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தான் உண்மை நிலை.

அரசு விவசாயிகளின் கடனை மட்டும் வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆனால் பெரு முதலாளிகள், தொழில் அதிபர்கள் போன்ற வசதி படைத்தவர்கள் வாங்கிய கடனை வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கைகளை ஆரம்பக்கட்டத்திலேயே எடுக்க அரசு தவறிவிட்டது.

பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் கடன் கொடுப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா என்பதெல்லாம் கேள்விக்குறியே.

எனவே பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ள தொகையை வசூல் செய்ய வேண்டும். அதே சமயம் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு- பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீடுகளை அதிகரிக்கும் விதமான அம்சங்கள் இருக்கும் வகையிலும், கடன் கொடுப்பதிலும், வசூல் செய்வதிலும், நியாயமாக கடன் வாங்க வருவோருக்கும், மாணவர்களுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் கடன் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். விவசாய தொழில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையிலும்- புதிய கொள்கை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
Tags:    

Similar News