செய்திகள்

இந்தியாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்த ராஜபக்சே முயல்வார்- திருமாவளவன்

Published On 2018-10-29 05:05 GMT   |   Update On 2018-10-29 05:05 GMT
சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்த ராஜபக்சே முயற்சிப்பார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Rajapaksa
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கை நெருக்கடி மூலம் வெளியேற்றி விட்டு தங்களின் ஆதரவாளரை சீன பேரரசின் விசுவாசிகள் ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.

இலங்கையில் தங்களுக்குத் தான் செல்வாக்கு உள்ளது என்பதை சீன பேரரசு, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜ பக்சே, மீண்டும் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவார். மேலும் சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே ஒரு புறமும், மற்றொரு பகுதியில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேயும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சம்பந்தம் தலைமையிலான குழுவினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடும்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி மேடைக்கு வந்த போது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இது தனிநபர் அவமதிப்பல்ல. ஜனாதிபதிக்கு செய்யும் அவமதிப்பாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று இருக்கையில் அமர்ந்து அவரை அவமதித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
Tags:    

Similar News