செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்

Published On 2018-10-18 10:50 GMT   |   Update On 2018-10-18 10:50 GMT
மாற்றுத்திறனாளிகளை மேற்கோள்காட்டி அநாகரிகமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MinisterRajendraBalaji
அடையாறு:

சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சுசீலா பொன்னுசாமி, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 16-ந் தேதி நாகர்கோவிலில் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை, அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து” என மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு அநாகரிகமாக பேசினார்.

இது என்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதை காயப்படுத்தி, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. #MinisterRajendraBalaji
Tags:    

Similar News