செய்திகள்
சாஸ்திரா பல்கலைக்கழகம்

தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு விரைவில் சீல் வைப்பு?

Published On 2018-10-05 06:34 GMT   |   Update On 2018-10-05 06:34 GMT
சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு நிலம் 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

அதாவது திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட அரசு நிலத்தில் 28 கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3-ந் தேதிக்குள் அங்குள்ள கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக சிறைத்துறை நிர்வாகம் அந்த இடத்தில் வேலி அமைத்து 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், மாணவிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த நிலத்தை எங்களுக்கே அளிக்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த தொகையை செலுத்த தயாராக உள்ளோம். திறந்தவெளி சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் அரசிடம் அணுகி பரிகாரம் தேடி கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு அளித்த காலக்கெடுவுக்குள் (அக்டோபர் 3-ந் தேதி) கட்டிடங்களை காலி செய்ய தஞ்சாவூர் தாசில்தார் சாஸ்திரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதையடுத்து நோட்டீசு பெற்றுக்கொண்ட பல்கலைக் கழக நிர்வாகத்தினர், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் விடுதிகளில் 2500 மாணவிகள் தங்கி படித்துள்ளனர். இதனால் தற்போது இடத்தை காலி செய்ய இயலவில்லை என்ற காரணத்தை தெரிவித்தனர். மேலும் மற்ற கட்டிடங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.

இதனால் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
Tags:    

Similar News