செய்திகள்

தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டார்- அமைச்சர் அன்பழகன்

Published On 2018-10-02 04:55 GMT   |   Update On 2018-10-02 04:55 GMT
தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #KPAnbazhagan #AnbumaniRamadoss
தருமபுரி:

தருமபுரியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக அன்புமணி ராமதாசை தவறாக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டனர். ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாகி விடும் என்று அவர் நினைக்கிறார்.

கடந்த 2001-2006 வரை நான் அமைச்சராக இருந்தபோது தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளை கொண்டு வந்தவன் நான். எனது சொந்த பந்தம், கட்டிடம் கட்டுவதற்காக கல்லூரிகள் கொண்டுவரவில்லை.

மாவட்ட மாணவர்களின் நலனுக்காகவே கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. இதை அன்புமணி ராமதாஸ் கொச்சைப் படுத்தி பேசுகிறார். வரும் தேர்தலில் யாரை எதிர்த்தால் மக்கள் தன்னை திரும்பி பார்ப்பார்கள் என்று நினைத்து 4 ஆண்டு காலம் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அன்புமணி என்மீது குறை கூறுகிறார்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நான் சென்றுள்ளேன். ஆனால் பல கிராமங்களுக்கு அன்புமணி நன்றி சொல்லக்கூட போகவில்லை. தொகுதி பக்கம் வராத நாடாளுமன்ற உறுப்பினர் எதை சொல்லுவது என்று தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், எனது குடும்பத்தினர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்றார். ஆனால் அவரது மகனையே எம்.பி.யாக்கி உள்ளார். உள்ளூரில் விலை போகாத அவர் தருமபுரியை நாடி வந்து இங்குள்ள மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் நாயக்கன்கொட்டாய் சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டதால் கடந்த எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். வருகிற தேர்தலில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியாது.

தருமபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மொரப்பூர் ரெயில் பாதை திட்டத்திற்காக 17 முறை மத்திய அமைச்சரை சந்தித்தால் மட்டும் போதுமா? இவர் மக்களையே சந்திக்கவில்லை. இவருக்கு முன்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தருமபுரி-மொரப்பூர் ரெயில் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை தான் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KPAnbazhagan #AnbumaniRamadoss
Tags:    

Similar News