செய்திகள்

ஆண்டிற்கு 80 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்- மனநல ஆலோசகர் பகீர் தகவல்

Published On 2018-09-14 14:57 GMT   |   Update On 2018-09-14 14:57 GMT
ஆண்டிற்கு 80 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அரசு மருத்துவகல்லூரி மனநல ஆலோசகர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு நலச்சங்கம் மற்றும் பாலன் நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார். பயிற்சி அலுவலர்கள் சுந்தர கணபதி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி க.மோகன் ராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், பலர் பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை என எண்ணுகின்றனர். தற்கொலை பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது. அதனை எதிர்கொண்டால் தற்கொலை செய்யும் எண்ணம் வராது. மேலும் மன அழுத்தமும் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது என்றார்.

அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர் அஸ்மா நிஜாமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனநல விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, உலக அளவில் வருடத்திற்கு 80 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் ஆண்களில் 15 சதவீதம் பேர் தற்கொலை செய்கிறார்கள். ஒரு லட்சம் பெண்களில் 8 சதவீதம் பேர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள். இதில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் பெரும்பாலும் இளம் வயதினர் குறிப்பாக பெண்களே ஈடுபடுகின்றனர்.

இதில் மரபணு சார்ந்த கோளாறுகள், குடும்ப சூழ்நிலை, கடன் தொல்லை, தாய்-தந்தை இடையில் சண்டை, குடிகார தந்தை, தற்கொலையில் ஈடுபட்டு இறந்து போன தாய், மற்றும் சுற்றுச் சூழலால் முக்கியமாக காதல் தோல்வி, மது போதைக்கு அடிமை ஆகுதல், முகநூல், வலைதளம், இன்ஸ்டாகிராம், இது தவிர மோமோ போன்ற காரணங்களால் தற்கொலை அதிகமாக வருகிறது.

தனிமை, விரக்தி காரணம் இல்லாமல் கோபம் அதிகமாக வருவது ,தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள் பற்றி பேசுவது, இறப்பு பற்றி பேசுவது, மற்றவர்களிடம் பாரமாக இருப்பது போன்று எண்ணுவது, தற்கொலை செய்து கொல்வேன் என மிரட்டுவது போன்றவையே தற்கொலைக்கான எண்ணங்களாக தோன்றும்.

இதனை தடுக்க மனநல மருத்துவரை அணுகுதல், பிசியோதெரப்பி வழங்குதல் தற்கொலை செய்து கொள்ள தூண்டும் பொருட்கள் (கத்தி, வி‌ஷம், ஆசிட், அரிவாள்) அவர்கள் பார்வையில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். மனநோய் இருந்தால் உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும்.அவர்கள் தனிமையில் இல்லாதவாறு தீவிர கண்காணிப்பு அவசியம். மேலும் உடனடியாக தீர்வு வேண்டுமெனில் அரசின் இலவச தொலைபேசியை பயன்படுத்தி ஆலோசனை பெறலாம்.மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம் என்றார்.

முன்னதாக நாட்டுநலப்ணித்திட்ட அலுவலர் ஜோதி மணி வரவேற்றார். முடிவில் பயிற்சி அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News