இந்தியா

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் - துயர சம்பவம் பற்றிய முழு விவரம்

Published On 2026-01-28 11:18 IST   |   Update On 2026-01-28 11:18:00 IST
  • அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.

இந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். துணை முதல்-மந்திரிகளாக அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிறிய வகை விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அஜித்பவாரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.

அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று பாராமதி தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் (வி.டி-எஸ்.எஸ்.கே.) பாராமதிக்கு புறப்பட்டார். அவருடன் 2 பாதுகாப்பு அதிகாரிகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்றனர்.

இன்று காலை 8.48 மணியளவில் அந்த சிறிய ரக விமானத்தை விமானி பாராமதி விமான நிலையத்தில் 11-வது ஓடுபாதையில் தரை இறக்க முயற்சித்தார். அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் மோதி 2 ஆக உடைந்து நொறுங்கியது. விமானம் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து அஜித்பவார் உள்பட 6 பேரையும் மீட்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித் பவார் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதே போல் அஜித்பவாருடன் சென்ற 5 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். 

Tags:    

Similar News