செய்திகள்

சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் - ஜி.கே.வாசன்

Published On 2018-08-29 04:28 GMT   |   Update On 2018-08-29 04:28 GMT
சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என கரூரில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #DMKThalaivarStalin #GKVasan
கரூர்:

கரூரில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க மாநில தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டதற்கு த.மா.கா. சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் தலைமையில் தி.மு.க. நன்கு வளர்ச்சியடையும். கருணாநிதி எதிர்கொண்ட சவால்களை சமாளிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என நம்புகிறேன்.

சமீபத்தில் மேட்டூர் அணை நிரம்பியதும் அதிகளவு உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டதால் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்று வீணானது. மணல் கொள்ளையால் முக்கொம்பு, கொள்ளிடம் மதகுகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன. எனவே காவிரி, கொள்ளிடம் உள்பட அனைத்து பகுதியிலும் ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். மேலும் மேட்டூர் அணை, கல்லணை போன்ற பழமை வாய்ந்த அணைகள் மற்றும் பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியபோதும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை.

விவசாய மக்களை அவலநிலைக்கு தள்ளிய பழி பொதுப்பணித்துறையையே சாரும். நீர்நிலை மேலாண்மையில் தமிழக அரசின் மெத்தனபோக்கு தெளிவாக தெரிகிறது. ஏரி-குளங்கள் ஆங்காங்கே வறண்டு கிடக்கின்றன. மதகு, கதவு, ஷட்டர் பழுதாகி உள்ளன. இதன் மூலம் காவிரி பாசன பகுதியில் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தண்ணீர் விரயமாவதை தடுக்க ராசிமணல் அை-ணையை உடனே கட்ட வேண்டும். மாணவ, மாணவிகளின் கல்விக்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

மணல் கொள்ளையால் திருச்சி காவிரி ஆற்றில் மதகுகள் உடைந்தது என்பதை ஏற்று கொள்ள தயங்கினால் அரசின் மீதான சந்தேகம் வலுத்து கொண்டே தான் போகும். த.மா.கா.வை பொறுத்த வரையில் கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு தனிதன்மையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்து, ஒத்த கருத்து ஏற்படக்கூடிய கட்சிக்கு ஆதரவு அளிப்போம். சுற்றுப்பயணம் செய்து கட்சியின் பலம், பலவீனத்தை அறிந்து வருகிறோம். இது வரை 48 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வருகிற டிசம்பருக்குள் அனைத்து தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #DMKThalaivarStalin #GKVasan
Tags:    

Similar News