செய்திகள்
கொலையுண்ட கலியமூர்த்தி, கைதான ஆலயமணி

கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்றேன்- கைதான மனைவி வாக்குமூலம்

Published On 2018-08-22 07:57 GMT   |   Update On 2018-08-22 07:57 GMT
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கொன்றதாக கைதான மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர், வடக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 45). டிரைவர். தே.மு.தி.க.கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி(40).

கடந்த 17-ந்தேதி கலியமூர்த்தி தனது மனைவி, 2 மகன்களையும் திருநள்ளாறு கோவிலுக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தார். அதன் பிறகு, அவர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் கலியமூர்த்தி உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து ஆலயமணியே தனது கணவரை தீர்த்துக்கட்டியிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கூலிப்படையினர் ஹரிகிருஷ்ணன் (19), 17 வயது சிறுவன் ஆகியோர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்கள். அவர்கள், கலியமூர்த்தியை கொலை செய்வதற்கு தேன்குமார் எங்களை அழைத்து சென்றார். மேலும் ஆலயமணி எங்களுக்கு ரூ.1 லட்சம், சரக்கு ஆட்டோ ஆகியவை தருவதாக கூறினார். அதன்பேரில் கலியமூர்த்தியை நாங்கள் கொலை செய்தோம் என்றனர்.

சரணடைந்த தேன்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன்

இதையடுத்து ஆலயமணி, ஹரிகிருஷ்ணன், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் ஆலயமணி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹரிகிருஷ்ணனை சேலம் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

கைதான ஆலயமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

நான், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறேன். இதனால் கடன் வி‌ஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஏமாந்தேர் கிராமத்தை சேர்ந்த சுற்றுலாவேன் டிரைவர் தேன்குமாருடன் (32) பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. ஜவுளிக்கடையில் துணி எடுப்பதற்காக அடிக்கடி கள்ளக்குறிச்சி சென்றேன். அப்போது, தேன்குமார் தன்னை வேனில் அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். ஏமாந்தேர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

மேலும் கணவர் வீட்டில் இல்லாதபோது புத்தூரில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து, தேன் குமாருடன் உல்லாசமாக இருந்தேன். இதுபற்றி தெரியவந்ததும் கலியமூர்த்தி என்னை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து தேன்குமாருக்கு எடுத்து கொடுத்த பணத்தை வாங்கி தருமாறு கேட்டு என்னை துன்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது பற்றி தேன்குமாரிடம் கூறினேன்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். 17-ந்தேதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விடு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் தேன்குமார் கூறினார். அதன்படி நானும், 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு 17-ந்தேதி அன்று திருநள்ளாறு கோவிலுக்கு சென்றேன்.

இரவு தேன்குமார் கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நேராக புத்தூர் வடக்குகாடு கிராமத்திற்கு வந்தார்.

கலியமூர்த்தி தோட்டத்து வீட்டில் இருப்பது குறித்து நான், செல்போனில் தொடர்புகொண்டு கூறினேன். அவர்கள் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். அங்கு தேன்குமார் வீட்டிற்கு வெளியே நின்றார்.

கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் வீட்டுக்குள் சென்று எனது கணவர் கலிய மூர்த்தியை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று ஏமாந்தேரியில் உள்ள ஒரு குளத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை தூக்கி வீசினார்கள். பின்னர் குளத்தின் கரையில் ஆடைகளை போட்டு தீ வைத்து எரித்தனர்.

கொலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டோம் என்று தேன்குமார் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். பின்னர் நாங்கள் இருவரும் விடிய, விடிய செல்போனில் பேசினோம். அப்போது அவர், என்னிடம் கொலை பற்றி எதுவும் தெரியாததை போல் நடந்து கொள் என்றும் கூறினார். நானும் அதுபோல் நடந்து கொண்டேன். ஆனால், போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் நான் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான தேன்குமார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நேற்று மதியம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க தலைவாசல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News