செய்திகள்

கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்துடன் செல்பி எடுத்த 5 வாலிபர்கள் கைது

Published On 2018-08-07 09:45 IST   |   Update On 2018-08-07 09:45:00 IST
வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காந்தல்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனபகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களும், அரியவகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி சாலையோரங்களில் சுற்றி வருகிறது. எனவே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. செல்பி, போட்டோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி விவரம் வருமாறு:-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனப்பகுதியில் கணிசமான அளவு ராஜநாகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சேரம்பாடி பஜாரையொட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் ஒரு மூங்கில் மரத்தில் ராஜநாகம் படுத்து இருந்தது. அதிக வி‌ஷத்தன்மை கொண்ட அந்த ராஜநாகத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சிலர் பிடித்து துன்புறுத்தி செல்பி எடுத்து அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தனர்.

இதுபற்றி கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. அவர் சேரம்பாடி வன சரகர் மனோகரனுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் ராஜநாகத்துடன் செல்பி எடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன்(27), ராமானுஜம்(45), தினேஷ்குமார்(28), யுகேஸ்வரன்(22), விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News