செய்திகள்
2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் 2-வது நாளாக நீடிப்பு

Published On 2018-07-31 07:02 GMT   |   Update On 2018-07-31 07:02 GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு நிலக்கரி கையாளுதல், பராமரிப்பு பணி போன்றவற்றை மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும், பணி நிரந்தரம், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மின்வாரிய அதிகாரிகளை ஏற்றி வந்த பஸ்சை அனல் மின் நிலையத்திற்குள் செல்ல விடாமல் சிறைப்பிடித்தனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் அனல் மின் நிலைய நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 3 மணிக்கு மேல் தொழிலாளர்கள் மற்றும் மின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளளது. அதற்கு பின்னர் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளுவது, சாம்பல் கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
Tags:    

Similar News