செய்திகள்

ஆசிரியை சாவுக்கு காரணமான கணவன் மீது கடும் நடவடிக்கை: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-07-26 13:03 GMT   |   Update On 2018-07-26 13:03 GMT
ஆசிரியை கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.#homebirthattempt

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில், மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து இருப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மருந்துகள் தலைமை மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று நோய் தடுப்பு மையங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புகடி உள்ளிட்டவைக்கு வி‌ஷ முறிவு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 2 ஆயிரம் நர்சுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று, தற்போது 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 562 பி.ஜி. இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசவத்தின் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 68 பேர் என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

திருப்பூரில் சமூக வலை தளங்களை பார்த்து பிரசவம் பார்த்த போது கிருத்திகா என்ற ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று யாரும் இணைய தலங்கள், சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் அல்லது மருத்துவம் பார்க்க கூடாது.

கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையங்கள் 72 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது கலெக்டர் ராமன் மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர். #SocialNetwork  #homebirthattempt

Tags:    

Similar News