செய்திகள்

தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2018-07-16 10:33 GMT   |   Update On 2018-07-16 10:33 GMT
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி நடந்து வருவதாக சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி:

சிவகாசியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட புதிய சொகுசு பஸ் சேவையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதிய வழித்தடங்களையும், புதிய பஸ்களையும் அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தினார்.

ஜெயலலிதா வழியில் செயல்படுகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும், நவீன மயமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் 515 புதிய அதி நவீன பஸ்களை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி மட்டுமல்லாமல் கூடுதலாக கழிப்பறை வசதிகளும் புதிய பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் 35 பஸ்கள் வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார். தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திட்டங்களை மட்டுமே முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றி வருகிறார். மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் பூட்டப்பட்டும் வருகின்றது.

தமிழக வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே வம்புக்காக பிரச்சனைகளை திசை திருப்பி தூண்டி விடுகின்றன. இந்த ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு மாய நிலையை உருவாக்க பார்க்கின்றனர். இது போன்ற தீய சக்திகளின் முயற்சிகள் தமிழகத்தில் எடுபடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் பொதுமேலாளர் மகேந்திர குமார், கிளை மேலாளர் மாரிமுத்து, சிவகாசி அண்ணா தொழிற்சங்க செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர் அசன் பதூரூதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
Tags:    

Similar News