செய்திகள்
முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர்.

தினகரன் கட்சியில் சேர விரும்பும் சரிதா நாயர்

Published On 2018-06-23 10:09 GMT   |   Update On 2018-06-23 10:09 GMT
முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். #SarithaNair #TTVDhinakaran
நாகர்கோவில்:

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் சரிதா நாயர்.

பெண் தொழில் அதிபரான இவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணையின் போது அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது செக்ஸ் புகார் கூறினார்.

இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதல்-மந்திரி அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.

வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் சினிமா மற்றும் டெலிவி‌ஷன் தொடர்களில் நடிக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

ஆனால் அவர் குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார்.

குமரி மாவட்டம் வந்து சென்ற சரிதா நாயருக்கு இங்குள்ள சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்றார்.



அவரை சந்தித்து பேசிய சரிதா நாயர் பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டார்.

இதற்கு ஒப்புக்கொண்ட பச்சைமால் இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்பு முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இதனை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், இப்போது தமிழக அரசியலில் கால் பதிக்க நினைப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SarithaNair #TTVDhinakaran

Tags:    

Similar News